Wednesday, March 25, 2009

ஈழத் தமிழ் அகதி முகாம்களின் நிலைகுறித்த அறிக்கை

தமிழக முதல்வரிடம் 04.07.2006 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை முழுமையாகப் இலங்கை அகதிகள் நிலை பற்றி ஆனந்த விகடனுக்காக (18.06.2006 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை எழுதியபோது அகதிகள் வாழ்வில் மாற்றமேற்பட அது தூண்டுகோலாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் அது இவ்வளவு விரைவில் நடக்குமென்று எண்ணவில்லை. ஆனந்த விகடன் இதழ் கடைகளுக்கு வருவதற்கு முன்பே காலையில் அதைப் படித்துவிட்டுத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அவரை விமர்சிக்கும் விதமாக நான் எழுதியிருந்த வரிகளைக் குறிப்பிட்டு வருத்தப்பட்டதோடு ஈழப் பிரச்சினைக்காகத் தான் செய்தவற்றையும் வரிசைப்படுத்தினார்.
அவரைக் குற்றம்சாட்டுவதல்ல எனது நோக்கம். அகதிகள் பிரச்சினை தொடர்பாக அவரது கவனத்தை ஈர்க்க வேண்டுமென்பதே எனது எண்ணமாயிருந்தது. இதனை அவரும் உணர்ந்ததால்தான் "நீங்களே அகதி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு ஒரு அறிக்கை கொடுங்கள்" என்று என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என எண்ணுகிறேன். முதல்வர் அவர்கள் கூறியதை ஏற்று நானும் பல்வேறு அகதி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு அங்கே கண்டவற்றையும் விசாரித்து அறிந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் அறிக்கை தயாரித்து முதல்வரிடம் சமர்ப்பித்தேன். அந்த அறிக்கையே இது.
அகதிகள் நிலை குறித்து ஆனந்த விகடனில் எனது கட்டுரையை வெளியிட்ட திரு. இரா. கண்ணன், ஞானவேல் ஆகியோருக்கும் ஜூனியர் விகடனில் வெளியிட்ட திரு. அறிவழகனுக்கும் நன்றி.
சில முகாம்களுக்கு என்னுடன் வருகை புரிந்ததுடன் சில பரிந்துரைகளையும் முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும் எனது நன்றி.
"கண்ணீர்த் துளிகள் சிறைக்கூடங்களாக மாறியது எப்படி என்பதை அகதிகளிடம் ... ... ... கேள்"
என்கிற சேரனின் கவிதையை 1998இல் படித்தபோது அது ஒரு கட்டளையாகவே என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தது. இன்று இந்த முகாம்களை நோக்கி என்னைச் செலுத்தியது அந்த வரிகளாகவும்கூட இருக்கலாம்.
- ரவிக்குமார்
தொலைந்த திசைகள்
உலகின் ஒவ்வொரு நாடும் தனது குடிமக்களை மட்டுமின்றிப் பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகளையும் கொண்டுள்ளது. உலகப் போருக்குப் பிறகு தீவிரமடைந்த அகதிகள் பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருதி ஐக்கிய நாடுகள் சபை 1951ஆம் ஆண்டில் அதற்கென்று ஒப்பந்தமொன்றை (1951 Convention Relating to the Status of Refugees) உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து 1967ஆம் ஆண்டில் உடன்படிக்கையொன்றும் (1967 Protocol Relating to the Status of Refugees) ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்டது. 1995 அக்டோ பர் மாத நிலவரப்படி உலகில் உள்ள நூற்று முப்பது நாடுகள் இவற்றில் கையெழுத்திட்டுள்ளன. 1951 உடன்படிக்கையின் அடிப்படையில் அகதிகளுக்கென்று ஹைகமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டார் (United Nations High Commissioner for Refugees - UNHCR) அகதிகள் பிரச்சினையை மேற்பார்வையிடுவது, பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் பணிகளை ஒருங்கிணைப்பது இந்த ஹைகமிஷனின் வேலையாகும். 1951ஆம் ஆண்டு ஐ.நா. ஒப்பந்தத்தில் அகதி என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.1
நமது நாட்டில் சீனா, நேபாளம், இலங்கை, மியான்மர், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் உள்ளனர். அகதிகளுக்கான அமெரிக்க கமிட்டி (U.S. Committee for Refugees and Immigrants - World Refugees Survey 2005) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2005ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுமார் 3,93,000 அகதிகள் இருந்தனர். அதில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் சுமார் 80,000 பேர்.2
தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள்
1983ல் இலங்கையில் வெடித்த இனக் கலவரம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு வரத் தொடங்கினர். 2003 செப்டம்பருக்குப் பிறகு அகதிகளின் வருகை சற்றே நின்றிருந்தது. 31.1.2005 நிலவரப்படி தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளுக்கென 103 அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு சிறப்பு முகாம்களாகும். மொத்தம் 14,031 குடும்பங்களைச் சோந்த 52,322 பேர் இந்த முகாம்களில் தங்கியிருந்தனர்.3
முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் மட்டுமல்லாது மேலும் பலர் தனியே தமது சொந்தப் பொறுப்பில் தங்கியுள்ளனர். புனர்வாழ்வுக் கழக அதிகாரிகளின் அனுமதி பெற்று முகாம்களுக்கு வெளியே தங்கியிருக்கும் அகதிகளுக்கு அரசு உதவி ஏதும் கிடைக்காது. ஆனால், கல்வி உள்ளிட்ட பிற சலுகைகள் அவர்களுக்குத் தரப்படும். 2003 பிப்ரவரி நிலவரப்படி 20,184 பேர் இப்படி முகாம்களுக்கு வெளியே தங்கியிருந்தனர்.
1985 முதல் 2005 வரை தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை அறிக்கையின் இறுதியில் உள்ள அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.
2003ஆம் ஆண்டுக்குப் பிறகு நின்றிருந்த அகதிகளின் வருகை தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக மீண்டும் தொடங்கியுள்ளது. 12.01.2006இல் மீண்டும் இலங்கையிலிருந்து அகதிகள் வரத் தொடங்கியுள்ளனர். 25.06.2006 வரை 3,349 பேர் புதிய அகதிகளாக இப்போது வந்துள்ளனர்.4 அவர்களில் 1,284 பேர் ஆண்கள், 1,160 பேர் பெண்கள்; ஆண் குழந்தைகள் 470, பெண் குழந்தைகள் 435 பேர். அகதிகளாக வரும்போது கடலில் படகு கவிழ்ந்து 5 பேர் இறந்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் அகதிகளின் நிலை
ஐ.நா. சபையின் 1951 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் (Convention and Protocol) இந்தியா கையெழுத்திடாத காரணத்தால், உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் இங்குக் கொடுக்கப்படவில்லை. 1996ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம், அகதிகளுக்கு உயிர் மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அகதிகளின் விருப்பத்துக்கு எதிராக அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என உச்சநீதி மன்றம் கூறியுள்ளபோதிலும் தமிழ் அகதிகள் பலர் கட்டாயப்படுத்தித் திருப்பி அனுப்பப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதுபோலவே தமிழ் அகதிகள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையே உள்ளது. பூடான் நாட்டைச் சேர்ந்த அகதிகளை எவ்விதத் தடையுமின்றிச் சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ள இந்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது.
ஈழத் தமிழ் அகதிகளிடையே சென்று பணியாற்றுவதற்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தன. 1992 ஜூன் மாதத்துக்குப் பிறகு "பாதுகாப்பு காரணங்கள்" எனக் கூறித் தொண்டு நிறுவனங்கள் தடுக்கப்பட்டன. UNHCR அலுவலர்களைக் கூடச் சட்டபூர்வமாக அகதி முகாம்களில் அனுமதிப்பதில்லை5.
அகதிகளுக்கு வழங்கப்படும் அரசு உதவிகள்
முகா ஈழத் தமிழர்ம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் ஒவ்வொருவருக்கும் பணம் மற்றும் பிற உதவிகள் அரசால் வழங்கப்படுகின்றன. மாநில அரசு இவற்றை வழங்கி விட்டு அந்தச் செலவுத் தொகை முழுவதையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. எனவே மாநில அரசுக்கு இதில் செலவு எதுவும் கிடையாது.
குடும்பத்தின் தலைவர்/தலைவிக்கு மாதம் ஒன்றுக்கு இருநூறு ரூபாயும், வயது வந்த உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 144 ரூபாயும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முதல் குழந்தைக்கு 90 ரூபாயும், பிற குழந்தைகளுக்கு 45 ரூபாயும் பணக் கொடை (cash dole) வழங்கப்படுகிறது. இது தவிர எட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 400 கிராம் வீதமும், அதற்குக் கீழே வயதுள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு 200 கிராம் வீதமும் அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி ஒரு கிலோ 57 பைசா விலையில் வழங்கப்படுகிறது.
பணம், அரிசி ஆகியவை தவிர ஆண்டுக்கு ஒருமுறை உடை மற்றும் பாய், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு போர்வை ஆகியவை தரப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களுக்குச் சமையல் பாத்திரங்கள் கொடுக்கப்படுகின்றன6.
அகதி முகாம்களைப் பார்வையிட்ட விவரம்
அகதி முகாமென்றால் மண்டபம் முகாம் மட்டுமே எல்லோரது நினைவுக்கும் வருகிறது. 1990 முதல் இங்கே வந்து பல்வேறு முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளது நிலையே அதிகம் கவனிக்கப்பட வேண்டியது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், அம்பலவாணன் பேட்டை, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய நான்கு ஊர்களில் மொத்தம் 1,182 பேர் முகாம்களில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு முகாமில் பதிவுபெற்ற அகதிகள் 949 பேரும் பதிவுக்காக விண்ணப்பித்து இதுவரை பதிவு கிடைக்காத அகதிகள் 325 பேரும் உள்ளனர்.
காட்டுமன்னார்கோயில் முகாமை 15.06.2006 மற்றும் 24.06.2006 தேதிகளிலும், குறிஞ்சிப்பாடி முகாமை 19.06.2006 மற்றும் 24.06.2006 ஆகிய தேதிகளிலும், அம்பலவாணன் பேட்டை, விருத்தாசலம் முகாம்களை 19.06.2006ஆம் தேதியும், கீழ்புத்துப்பட்டு முகாமை 16.06.2006 ஆம் தேதியும், மண்டபம் முகாமை 25.06.2006ஆம் தேதியும் பார்வையிட்டோ ம். முகாம்களிலுள்ள அகதிகளை விசாரித்துப் பொதுவான பிரச்சினைகளையும், அந்தந்த முகாமிலுள்ள குறிப்பான பிரச்சினைகளையும் கேட்டறிந்தோம். நாங்கள் பார்வையிட்டதிலேயே காட்டுமன்னார்கோயில் முகாம்தான் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது.
அகதி முகாம்களின் அவல நிலை
அ. குடியிருப்புகள்
தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் மண்டபம் மற்றும் கொட்டப்பட்டு (திருச்சி) முகாம்களில் மட்டும்தான் நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மற்ற முகாம்கள் யாவும் தற்காலிக வீடுகளால் ஆனவையே. மண்டபத்தில் நிரந்தர வீடுகள் கட்டப்பட்டதன் பின்னணி சுவாரசியமானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கெனத் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானவர்களை அழைத்துச் சென்றனர். அவர்களைப் பரிசோதித்து அனுப்புவதற்கென்று (quarantine) கட்டப்பட்டதுதான் மண்டபம் முகாம். 1917இல் இலங்கை அரசாங்கம் 107 பிளாக்குகள் கொண்ட 304 குடியிருப்புகளை அங்கே கட்டியது. 235.5 ஏக்கர் நிலப் பரப்பில் (சர்வே எண்: 430/1) அமைந்துள்ள அந்த முகாமை 1965ஆம் ஆண்டில்தான் இலங்கையிடமிருந்து தமிழக அரசு விலைக்கு வாங்கியது. (வருவாய்த் துறை அரசாணை எண்: SMS 2725 dated 23.9.1965) பத்தொன்பது லட்சம் ரூபாயை அப்போது விலையாகத் தமிழக அரசு இலங்கை அரசாங்கத்துக்குச் செலுத்தியது. சிறீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்துக்குத் திரும்பிய மலையகத் தமிழர்கள் தங்கிச் செல்லும் முகாமாக (transit camp) மண்டபம் முகாம் செயல்பட்டது. 1983க்குப் பிறகுதான் தமிழ் அகதிகளுக்கான முகாமாக அது மாற்றப்பட்டது. கொட்டப்பட்டு முகாமும் தாயகம் திரும்பியோருக்கென (repatriates) கட்டப்பட்டதுதான்.
மண்டபம் முகாமில் மொத்தம் 1955 வீடுகள் உள்ளன. அவற்றில் 92 வீடுகள் பழுதடைந்துள்ளன. மீதமுள்ள 1863 வீடுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளன.
காட்டுமன்னார்கோயில் முகாம் ஒரு தானியக் கிடங்கில் அமைக்கப்பட்டிருப்பதால் வீடு எனக் கூறிக்கொள்ள அங்கு எதுவுமில்லை. அம்பலவாணன்பேட்டை முகாமில் 79 குடும்பங்கள் உள்ளன. அவை குடியிருப்பது சிதைந்த கூரைகளைக் கொண்ட மண் குடிசைகளில். குறிஞ்சிப்பாடி முகாமில் 126 வீடுகள் உள்ளன. அவை கூரைகள் சிதைந்து மோசமாகக் காணப்படுகின்றன. விருத்தாசலம் முகாமில் 60 வீடுகள் உள்ளன.
எல்லா முகாம்களிலும் கூரைகள் சிதைந்து மிகவும் மோசமான நிலையில்தான் வீடுகள் உள்ளன. எல்லாவற்றிலும் கேடான நிலையில் காட்டுமன்னார்கோயில் முகாமில் பிளாஸ்டிக் சாக்குகளைக் கொண்டுதான் வீடுகள் போன்ற தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மழைக் காலத்தில் ஒழுகுவதாலும் வெயில் காலத்தில் தாங்க முடியாத வெக்கையின் காரணத்தினாலும் வீடுகளுக்குள் மனிதர்கள் தங்க முடியாத நிலையே உள்ளது.
ஆ. கழிப்பிடங்கள்
பெரும்பாலான முகாம்களில் கழிப்பிட வசதி சரியாக இல்லை. இதனால் பெண்கள் சொல்லவொண்ணா அவதிக்கு ஆளாகின்றனர். மண்டபம் முகாமில் மொத்தம் 1,013 கழிப்பறைகள் பழுதடைந்துள்ளன. 182 கழிப்பறைகள் மட்டும்தான் பயன்படுத்தக்கூடியனவாக உள்ளன. அம்பலவாணன்பேட்டை முகாமில் 17 கழிப்பறைகளில் 10 மட்டுமே பயன்படுத்தத் தகுதியானவையாக உள்ளன. குறிஞ்சிப்பாடி முகாமில் உள்ள 28 கழிப்பறைகளில் 20 பயன்பாட்டில் உள்ளன. விருத்தாசலம் முகாமில் 12 கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால் அவை பழு தடைந்து கிடக்கின்றன. கீழ்புத்துப்பட்டில் 26 கழிப்பறைகள் இருந்தும் அவை பயன்படுத்தும் நிலையில் இல்லை.
இ. குடிநீர்
நான் பார்வையிட்ட முகாம்களில் காட்டுமன்னார் கோயில் தவிர பிற முகாம்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை. காட்டுமன்னார்கோயிலில் மாவட்ட ஆட்சியரின் தலையீட்டால் தற்போது அவசரமாகக் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது. மண்டபம் முகாமில் 434 குடிநீர்க் குழாய்கள் உள்ளன. அவற்றில் 284 குழாய்கள் பழுதடைந்துள்ளன. முகாமுக்குள் 73 கிணறுகள் உள்ளன. அவை நான்கு தாய்க் கிணறுகளோடு இணைக்கப்பட்டு மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிக்குத் தண்ணீர் ஏற்றப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. அம்பலவாணன் பேட்டை முகாமில் பஞ்சாயத்துக் குடிநீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் தரப்படுகிறது. குறிஞ்சிப்பாடி முகாமிலும் இரண்டு பம்ப்புகள் பழுது நீக்கப்பட வேண்டும். விருத்தாசலத்தில் முனிசிபாலிட்டியிலிருந்து தண்ணீர் கொடுக்கப்படுகிறது.
ஈ. மின்சாரம்
முகாம்கள் எல்லாவற்றிலும் மின்சார வசதியென்பது மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை மின்சார 'சப்ளை' நிறுத்திவைக்கப்பட்டு, பொழுதுசாயும் நேரத்தில்தான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஒரு வீட்டுக்கு நாளொன்றுக்கு ஒரு யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என வாய்மொழி உத்தரவு உள்ளது. முகாமில் உள்ள வீடுகளுக்கு ஒரே மீட்டர் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் அதிகபட்ச யூனிட் தொகையைக் கட்ட வேண்டியுள்ளது. நாலைந்து மீட்டர்கள் மூலம் விநியோகித்தால் செலவு குறையும். தனி மீட்டர் பொருத்திக்கொள்ளும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அதற்குச் செலவிடப் பணமில்லாத காரணத்தால் தனி மீட்டர்கள் பொருத்தப்படவில்லை. முகாம்களில் மின்விசிறி, மிக்ஸி போன்ற மின்சாதனங்களைப் பயன்படுத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் மின்சாரம் நிறுத்தப்படுவதால் கைக்குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றன.
உ. கல்வி
அகதிக் குழந்தைகளின் படிப்புக்காகக் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவர்கள் படித்த பள்ளிகளிலிருந்து இடமாற்றச் சான்றிதழ் (transfer certificate) பெற்று வரவில்லையென்றாலும்கூட அகதிக் குழந்தைகள் தமது படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக அந்தந்த வகுப்புகளிலேயே சேர்ந்து படிக்க வகைசெய்யப்பட்டுள்ளது. சீருடை, நோட்டுப் புத்தகங்கள், சத்துணவு, இலவச பஸ் பாஸ் முதலானவையும் அகதிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. எனினும் கட்டணங்களில் எந்தச் சலுகையுமில்லை. பள்ளிக் கல்வி முடித்து கல்லூரிகளுக்குச் செல்லும்போது கட்டணம் செலுத்த முடியாததால் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது.
தொழிற்கல்வியில் அகதி மாணவர்களுக்குச் சில இடங்கள் முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அந்த வசதியைப் பயன்படுத்தி மருத்துவம், பொறியியல் கல்வியை அவர்களில் பலர் பெற்றனர். இப்போது அந்த ஒதுக்கீடு இல்லாததால் அகதி மாணவர்கள் தொழிற்கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊ. வேலை வாய்ப்பு
அரசு கொடுக்கும் பண உதவியைக் கொண்டு அகதிகள் வாழ்க்கை நடத்த முடியாது என்பதால் அவர்கள் வேலைக்குச் செல்கின்றனர். முகாமை விட்டு வௌதயூருக்குச் செல்ல வேண்டுமென்றால் வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். எனவே, அவர்கள் உள்ளூரிலேயே வேலை தேட வேண்டியுள்ளது. வேறு இடத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படாததால் தினக்கூலி வேலை மட்டுமே செய்ய முடிகிறது. ஆகையால் பெரும்பாலும் கட்டுமானத் தொழிலில்தான் அவர்கள் உள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள்கூடக் கட்டட வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. தனியார் நிறுவனங்கள் அகதிகளைச் சந்தேகத்தோடு பார்த்து வேலைதர மறுக்கின்றன.
சுயதொழில் செய்வதற்கான உரிமங்களைப் பெறுவதிலும் அவர்களுக்குச் சிரமங்கள் உள்ளன. அதிகபட்சம் மீன் வியாபாரம், ஐஸ் வியாபாரம், காய்கறி வியாபாரம் எனத் தெருக்களில் சென்று வியாபாரம் செய்கிற (street vendors) நிலையில்தான் அவர்கள் உள்ளனர். ஒப்பீட்டளவில் பெண்கள் குறைவாகத்தான் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களும்கூடச் சித்தாள் வேலையில்தான் ஈடுபட முடிகிறது. பெண்களுக்குக் கைத்தொழில் பயிற்சி ஏதும் இல்லாததால் அவர்கள் வேலை செய்ய விரும்பினாலும் இயலாத நிலை உள்ளது.
சில முகாம்களில் ஓட்டுனர் பயிற்சி பெற்ற இளைஞர்கள் உள்ளனர். தொடக்க காலத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதில் சிக்கல் இல்லை. தற்போது உரிமம் பெற முடிவதில்லை. உரிமம் பெற்ற சில இளைஞர்கள் ஆட்டோ ஓட்டுகின்றனர்.
பதிவு நீக்கம் என்னும் தண்டனை
தமிழ்நாட்டுக்குள் நுழையும்போதே அகதிகள் பதிவுசெய்துகொண்டாக வேண்டும். முகாம்களில் அவர்களுக்குக் குடும்ப அட்டையும் அகதிகளுக்கான அடையாள அட்டை ஒன்றும் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில்தான் உதவித் தொகை. ரேஷன் வினியோகம் போன்றவை நடக்கின்றன. ஒரு முகாமில் தொடர்ச்சியாகச் சில நாட்களுக்கு இல்லாவிட்டாலோ அனுமதி பெறாமல் வேறு முகாமுக்குச் சென்றாலோ அவரது பெயர் பதிவிலிருந்து நீக்கப்படும். பதிவு இல்லாது போனால் அவருக்கு அகதி என்ற அடையாளம் பறிபோய்விடும். அதன்பின் அவர் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அயல் நாட்டவராகிவிடுகிறார்.
பெண்கள் திருமணமாகி வேறு முகாம்களுக்குப் போகும்போது, அவர்கள் முன்பிருந்த முகாம்களில் பதிவு நீக்கப்படுகிறது. ஆனால் புதிதாகச் சென்ற முகாம்களில் அவ்வளவு எளிதாகப் பதிவுபெற முடிவதில்லை. பதிவுக்காக விண்ணப்பித்துப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. கீழ்புத்துப்பட்டு முகாமில் உள்ள பதிவு பெற்ற குடும்பங்கள் 263, பதிவில்லாத குடும்பங்கள் 102. பதிவு பெற்ற நபர்கள் 949, பதிவுக்கு விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்காத நபர்கள் 325.
பதிவு நீக்கம் என்பது அகதிகளுக்கு விதிக்கப்படும் தண்டனையாகவும் உள்ளது. உரிமைகளைக் கேட்பது உட்பட ஒருவர் எதைச் செய்தாலும் அது குற்றம்தான். அதற்குத் தண்டனை பதிவு நீக்கம். கணவனால் கைவிடப்பட்டு மீண்டும் தனது பெற்றோர் இருக்கும் முகாமுக்கு வருகிற பெண்ணுக்குப் பதிவு கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன. தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளில் சுமார் முப்பதாயிரம்பேருக்குப் பதிவு இல்லை என்கிறார் OFERR என்னும் தொண்டு நிறுவனத்தின் திரு. சந்திரஹாசன்7.
பிற முகாம்களில் உள்ள உறவினர்கள் இறந்துவிட்டால் கூட வட்டாட்சியர் அனுமதி பெற்ற பிறகுதான் செல்ல வேண்டும். வட்டாட்சியரைப் பார்த்து அனுமதி பெறுவது எளிதான காரியமல்ல. ஏற்கனவே பணிச் சுமைகளால் நசுங்கிக்கொண்டிருக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அகதிகள் பிரச்சினையைக் கையாளுவது தேவையற்ற கூடுதல் சுமையாகவே தெரிகிறது. வட்டாட்சியர் தலைமை நிலையத்தில் இல்லாதுபோனாலோ அவர் விடுப்பில் இருந்தாலோ அகதிகள் அனுமதி பெறுவது மேலும் சிக்கலாகிவிடும். குறைந்தது இரண்டு, மூன்று நாட்களாவது இதற்கு ஆகிறது. எனவே இறப்பு முதலான நிகழ்ச்சிகளுக்கும்கூட உரிய காலத்தில் போக முடிவதில்லை.
பதிவு நீக்கப் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். மணமாகி வேறு முகாமுக்குப் போகும் பெண்ணின் பெயர் அவர் இருந்த முகாமில் உடனடியாக நீக்கப்படுகிறது. ஆனால், அவர் சென்றுசேரும் புதிய முகாமில் எளிதில் பெயரைச் சேர்க்க முடிவதில்லை. கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்துக்கெனப் பெற்றோர் இருக்கும் முகாமுக்கு வந்தாலோ அல்லது மகளின் பிரசவ காலத்தில் உடனிருப்பதற்காகத் தாயானவர் வேறு முகாமுக்குச் சென்றாலோ அவர்களது பெயர்கள் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டுவிடும். மீண்டும் அவர்கள் பதிவு பெறுவது அவ்வளவு சுலபமல்ல.
'பதிவு நீக்கம்' என்னும் அச்சுறுத்தல் காரணமாகப் படித்த இளைஞர்கள் தனியார் கம்பெனிகளில் வேலை தேட முடியவில்லை. வெளியூர் சென்று வேலை பார்ப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக அகதிகளுக்கு உள்ளது. இதனால் பட்டப்படிப்பு முடித்தவர்கள்கூடக் கட்டட வேலைக்குக் கூலிகளாகச் செல்ல வேண்டியுள்ளது. பதிவுக்காக விண்ணப்பித்துப் பல ஆண்டுகளாகியும் கிடைக்காத பலர் முகாம்களில் உள்ளனர்.
அனாதரவான முதியோர்
தங்கள் நாட்டிலிருந்து வரும்போதே உறவினர்களின்றித் தனியாக வந்த ஆண்/பெண், இங்கு வந்தபின்தம் உறவினர்கள் இறந்துபோனதால் தனித்துவிடப்பட்ட ஆண்/பெண் நிலை மிகவும் பரிதாபகரமானது. அவர்கள் கூலி வேலைக்குச் செல்லக்கூடிய உடல் வாகு உள்ளவர்களாக இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் அவர்களது நிலை மிகவும் மோசமாகிவிடும். தங்களுக்குத் தரப்படும் பணக்கொடை மற்றும் ரேஷன் அரிசியைக் கொண்டு அவர்கள் சாவை ஒத்திப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அகதிகளிலும் அகதிகளாக ஒவ்வொரு முகாமிலும் குறைந்தது பத்து விழுக்காட்டினர் உள்ளனர்.
உடல் ஊனமுற்றோர்
அனாதரவானவர்களைப் போலவே ஒவ்வொரு முகாமிலும் உடல் ஊனமுற்றோரும் கணிசமாக உள்ளனர். அகதிகளின் உணவில் ஊட்டச் சத்து இல்லாதிருப்பது இதற்கு முக்கியக் காரணமாகும். மானிய விலையில் அரிசி மட்டுமே கொடுக்கப்படுகிறது. பருப்பு வகைகளும் கொடுக்கப்படுமேயானால் உதவியாக இருக்கும். குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்துள்ள உணவு வழங்குவதற்கு வகை செய்யப்பட வேண்டும். அதுபோலவே பால் கொடுக்கும் தாய்மார்களின் ஆரோக்கியமும் பிறந்த குழந்தையின் நலனும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் முகாம்களை அணுகுவதற்குத் தடையில்லாத நாட்களில் ஊட்டச் சத்து உணவு வழங்கும் பணியைச் சில நிறுவனங்கள் செய்துவந்துள்ளன. OFERR தொண்டு நிறுவனம் மாலை நேரங்களில் முகாம்களில் நடக்கும் போதனா மையங்களுக்கு வரும் பிள்ளைகளுக்குப் பால், அவித்த பயறு முதலியவற்றை வழங்கிவந்துள்ளது. அதுவும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது.8 இப்படியான காரணங்களால் குழந்தைகள் பிறவி ஊனத்தோடு காணப்படுகின்றனர். ஊமை, குருடு, முடம் முதலான ஊனங்கள் அவர்களைப் பாதித்துள்ளன. ஊனத்தைத் தடுப்பதற்காக ஊட்டச் சத்து மிக்க உணவைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிப்பது, தற்போது முகாம்களிலுள்ள ஊனமுற்ற பிள்ளைகளுக்கும் தனிக் கவனம் எடுத்துக்கொண்டு அவர்களது கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு வழிசெய்வது என இருவிதமான நடவடிக்கைகள் இதில் தேவைப்படுகின்றன. பொதுவான விகிதத்தைவிடக் கூடுதலான விகிதத்தில் ஊனமுற்றோர் காணப்படுவது கவலைக்குரியதாகும்.
கலப்பு மணம்
வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதைத்தான் நாம் கலப்பு மணம் என்று கூறுவோம். ஒரு அகதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் திருமணம் செய்துகொள்வதையும்கூட நாம் கலப்பு மணம் என்றே குறிப்பிடலாம்.
அகதி முகாமிலுள்ள ஓர் ஆண் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாலும் அகதியாக உள்ள ஒரு பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் ஆணைத் திருமணம் செய்துகொண்டாலும் அவர்கள் அகதி முகாம்களில்தான் பெரும்பாலும் குடும்பம் நடத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் பதிவு கிடையாது.
ஒரு குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்திய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் அந்தக் குழந்தையை அகதியாகக் கருத முடியாது எனச் சட்டமிருப்பதால் இந்த நிலை உள்ளது. ஒரு இந்தியக் குடிமகனைத் திருமணம் செய்துகொள்ளும் அகதிப்஢ பெண்ணுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் ஒரு அகதி ஆணை மணம் புரிந்துகொள்ளும் இந்தியப் பெண்ணுக்கு இது நடைமுறை ரீதியாகப் பொருந்துவதில்லை. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அகதி முகாம்களில் அகதி வாழ்க்கையைத்தான் வாழ்கின்றன. எனவே அவர்களுக்கும் இந்த வரையறை பொருத்தமாக இல்லை.
பணக்கொடை (Cash Dole)
தற்போது அகதிகளுக்கு வழங்கப்படும் பணக்கொடை பல ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டதாகும். பணக்கொடை நான்கு அடுக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு எந்தவிதத் தர்க்க நியாயமும் கிடையாது. ஒரு குடும்பத்தின் தலைவருக்கு ரூ. 200 எனவும், குடும்பத்தில் உள்ள பிற வயது வந்த (adult) உறுப்பினர்களுக்கு ரூ. 144 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாகுபாட்டுக்கு எவ்வித நியாயமும் இல்லை. இதுபோலவே முதல் குழந்தைக்கு ரூ. 90 எனவும் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ரூ. 45 எனவும் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் எவ்விதத் தர்க்க நியாயமும் இருக்க முடியாது. அரிசி கொடுப்பதற்கு நிர்ணயித்துள்ளதுபோல 'பெரியவர்', 'சிறியவர்' என இரண்டே விதமான பிரிவுகளை வைப்பதுதான் சரியாக இருக்கும்.
பணக்கொடை ஒவ்வொரு முகாமிலும் ஒரே நாளில் தரப்படுகிறது. அந்த நாளில் முகாமில் இல்லாதவர்கள் அந்தத் தொகையைப் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்குமுன் இரண்டு தவணைகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட பணக்கொடை இப்போது மாதம் ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளது. ஆனால் பணக்கொடை வழங்கப்படும் நாளில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளையும்கூட நேரில் ஆஜர்படுத்த வேண்டுமென அதிகாரிகள் வற்புறுத்துவதாக அகதிகள் தெரிவிக்கின்றனர். அனைவரும் ஒரே நாளில் ஆஜராகித் தொகையைப் பெறுவதும்கூடச் சிரமமாகவே உள்ளது. பணக்கொடை வழங்கப்படும் நாளிலிருந்து ஒரு வார காலத்துக்குள் ரேஷனில் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய், சீனி முதலிய பொருட்களையும் வழங்கினால் அவற்றை வாங்குவதற்குச் சிரமமில்லாமல் இருக்கும் என அகதி முகாம்களில் உள்ளவர்கள் தெரிவித்த கருத்து பரிசீலிக்கப்பட வேண்டியதாகும்.
தற்போது வழங்கப்படும் பணக்கொடையை உயர்த்தித் தர வேண்டும் என்பது அகதி மக்களின் நியாயமான கோரிக்கை. அகதிகள் தொடர்பான ஐ.நா. சபையின் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தால் நாமும் இப்போது ஐரோப்பிய நாடுகள் வழங்குவதுபோல் பணக் கொடை வழங்க வேண்டியதிருக்கும். அப்படிக் கையெழுத்திடாத காரணத்தால் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் 'இனாம்' தருவதாக எண்ணி நாம் அகதிகளுக்கு உதவித் தொகை வழங்குகிறோம். நாம் வழங்குகிற தொகை ஐரோப்பிய நாடுகள் தருகிற உதவித் தொகையில் சுமார் நூறில் ஒரு பங்குதான் என்பது நாம் பெருமைப்படத்தக்க செய்தியல்ல. உதாரணமாகக் கனடாவை எடுத்துக்கொண்டால் அங்கு மாதம் 545 டாலர் பணக்கொடை வழங்கப்படுகிறது. அது இந்திய ரூபாய் மதிப்பில் (ஒரு கனடிய டாலர் 41 ரூபாய்) இருபதாயிரம் ரூபாய்க்கும் கூடுதலாகும். இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஒருவருக்கு குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு 839 ரூபாய் தேவையென்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்9 (உணவுக்கு 573 ரூபாய், மருத்துவம் 30 ரூபாய், உடை 17 ரூபாய், மின்சாரம் விறகு உள்ளிட்ட எரிபொருட்கள் 55 ரூபாய், பிற செலவுகள் 164 ரூபாய்). எனவே அதற்குக் குறையாமல் பணக்கொடையை உயர்த்தித் தர வேண்டும்.
ரேஷன் பொருட்கள்
தற்போது அகதிகளுக்கு மானிய விலையில் அரிசி வழங்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு 57 பைசா என அந்த அரிசியின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிசி தவிர மண்ணெண்ணெய் (மாதம் ஒன்றுக்கு ஐந்து லிட்டர்) மற்றும் சீனி (நபருக்கு மாதம் ஒன்றுக்கு அரை கிலோ) ஆகியவையும் வழங்கப்படுகின்றன. மண்ணெண்ணெயும் சீனியும் வெளிச் சந்தை விலையில்தான் தரப்படுகின்றன. சீனி அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு இரண்டு கிலோதான் கொடுக்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஐந்து லிட்டருக்கு 43 ரூபாய். சீனி ஒரு கிலோ ரூபாய் 13.50.
அரிசியுடன் பருப்பும் மானிய விலையில் தரப்பட்டால் உதவியாக இருக்குமென அகதி மக்கள் கருதுகின்றனர். கொடுக்கப்படும் அரிசி உரிய எடையில் இருப்பதில்லை என்ற புகார் ஒவ்வொரு முகாமிலும் தெரிவிக்கப்பட்டது. 25 கிலோ வாங்கினால் 20 கிலோதான் உள்ளது எனக் கூறினார்கள். மண்ணெண்ணெய் மாதத்தில் ஒரு நாள்தான் வழங்கப்படுவதாகவும் அந்த நாளில் போய் வாங்கவில்லையெனில் பிறகு அது தரப்படுவதில்லையெனவும் புகார்கள் கூறப்பட்டன. மண்ணெண்ணெயின் அளவும் குறைவதாகக் கூறினார்கள்.
சீனியின் அதிகபட்ச வரம்பை நீக்கி நபருக்கு அரை கிலோ என வழங்கினால் நல்லதென அகதி மக்கள் விருப்பம் தெரிவித்தனர். ஒரு குடும்பத்தில் சில சமயம் எட்டுப் பேர்கூட உள்ளனர். அவர்களுக்கு இரண்டு கிலோ போதுமானதாக இருக்காது. எனவே அதிகபட்ச வரம்பை நீக்குவதே சரியானதாக இருக்கும்.
மண்ணெண்ணெய் போதுமானதாக இல்லை, எனவே அதைக் குடும்பத்துக்குப் பத்து லிட்டர் என உயர்த்தித்தர வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையும் நியாயமானதே. மண்ணெண்ணெய் முதலானவற்றையும்கூடச் சலுகை விலையில் கொடுக்கலாம். மண்ணெண்ணெயை ஒரே நாளில் போட்டு முடித்துவிடுவதற்குப் பதிலாக மாதத்தில் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டுமெனவும் முகாம்களுக்கு அருகாமையில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் அவற்றை வழங்க வேண்டும் எனவும் அகதிகள் கோருகின்றனர்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள்
ஒவ்வொரு முகாமிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பதினைந்து முதல் இருபது பெண்கள்வரை உறுப்பினர்களாக உள்ளனர். ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக (OFERR) சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்துவதற்கு ஆலோசனைகள் நல்கப்பட்டுள்ளன. குழுவின் உறுப்பினர்கள் வாரத்துக்கு 15 முதல் 20 ரூபாய்வரை சேமித்து அதில் வரும் தொகையை ஒரு நபருக்கு ரூ. 1000 வீதம் தமக்குள்ளாகக் குறைந்த வட்டிக்குத் தருகின்றனர். இந்தக் குழுக்கள் வங்கிக் கணக்கு துவக்க முடியவில்லை. எனவே தங்களது மூலதனத் தொகையைக் கையாள்வதிலும் கடன் பெறுவதிலும் சிரமப்படுகின்றனர். எனவே மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் கணக்கு ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
குழுவின் உறுப்பினர்கள் தமக்கு ஏதேனும் கைத் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டால் அதனைப் பயன்படுத்தித் தாங்களும் பொருளீட்டிக் குடும்பச் சுமையைக் குறைக்க விரும்புகின்றனர். தையல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல் என அவர்களுக்கு ஏதாவதொரு பயிற்சி அளிக்கப்படுவது அவர்கள் அரசின் பணக்கொடையையே சார்ந்திருப்பதிலிருந்து அவர்களை விடுவிப்பதாயிருக்கும்.
பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள்
அகதி முகாம்களில் வசிப்பவர்களின் பிறப்பு, இறப்பு பதிவுகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. இங்கே பிறக்கும் அகதிக் குழந்தைக்கு இலங்கை ஹைகமிஷன் மூலமாக இலங்கைப் பதிவினைப் பெற வேண்டும். அத்தகைய பதிவுக்கான விண்ணப்பங்களை இலங்கை ஹைகமிஷன் அவ்வப்போது பரிசீலித்து விரைந்து பதிவினை வழங்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் பெறப் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. அதுபோலவே இறப்புப் பதிவும் சரியாக இல்லை.
அகதிகள் திருமணம் செய்துகொண்டால் அதையும் இலங்கை ஹைகமிஷன் மூலமாகப் பதிவுசெய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தாயகம் திரும்பும்போது சிக்கல் நேரிடும். பெரும்பாலானவர்கள் வசதியில்லாத நிலையில் கோயில்களில் திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களிடம் கோயிலில் தரப்படும் ரசீது மட்டும்தான் உள்ளது. அதன் அடிப்படையில்தான் இலங்கை ஹைகமிஷனிடமிருந்து திருமணப் பதிவைப் பெற வேண்டும்.
பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளுக்காக விண்ணப்பித்தால் அதை அந்தந்த முகாம்களுக்கே திரும்பவும் அனுப்பிப் பரிசோதிக்கும் நடைமுறை காரணமாகக் கால விரயம் ஏற்படுகிறது. எனவே நேரடியாகவே சான்றிதழ் வழங்கும் முறை வேண்டுமென அகதிகள் கோருகின்றனர்.
1992ஆம் ஆண்டுக்குப் பிறகு திருமணங்களைப் பதிவு செய்வது முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக ளிதிணிஸிஸி அமைப்பைச் சேர்ந்த திரு. சந்திரஹாசன் அவர்கள் தெரிவித்தார்.
குடியுரிமை
இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தின்படி இலங்கைக்கு வௌதயே பிறக்கும் இலங்கை நாட்டவரின் குழந்தைகளை அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் பதிவுசெய்து பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டும்.
இந்தியக் குடியுரிமைச்சட்டம் 1955இன் பிரிவு 3இன்படி இந்தியாவில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் இந்தியப் பிரஜையாகவே கருதப்பட்டுவந்தது. ஆனால் 1986இல் அந்தப் பிரிவு திருத்தப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் 1986இன்படி, அது நடைமுறைக்கு வந்த 1987 ஜுலை 1ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் அதன் பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால்தான் அந்தக் குழந்தைக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.10 ஆனால் இந்த விதியும்கூட இங்கு பின்பற்றப்படவில்லை. அகதி ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரைத் திருமணம் புரிந்து அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் இந்தியப் பிரஜைகளாகவுமில்லாமல் அகதி என்ற பதிவுமில்லாமல் இரண்டும் கெட்டான் நிலையில் தவிக்கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
வௌதநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும்கூட இந்தியக் குடியுரிமை - இரட்டைக் குடியுரிமை - வழங்கப்பட்டுள்ள இன்றைய சூழலுக்கேற்பக் குடியுரிமைச் சட்டத்தைத் திருத்திப் பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் தொடர்ச்சியாக வாழும் அகதிகளிடத்தே விருப்பத் தேர்வினைத் (option) கேட்டு அவர்கள் விரும்பினால் இந்தியக் குடியுரிமையைத் தேர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். அதுபோலவே இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு முன்பிருந்ததுபோலக் குடியுரிமை அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும்.
மண்டபம் முகாமுக்குப் புதிதாக வரும் அகதிகளை அழைத்துவருவதற்காக இப்போது நடைமுறையில் உள்ள முறை மாற்றப்பட வேண்டும். அவர்களை உடனடியாக முகாமுக்குள் கொண்டுவந்து சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். புதிதாக வரும் அகதிகளிடம் விசாரணை முடிந்தவுடன் அவர்களுக்கு வீடு ஒதுக்கித் தருவதோடு பாத்திரங்கள் மற்றும் ரேஷன் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் (இப்போது ரேஷன் பொருட்களை வழங்க ஒரு வாரம் வரை ஆகின்றது).
மண்டபம் முகாமில் 'க்யூ' பிரிவுப் போலீசாரின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதெனவும் வீடு ஒதுக்குவது உள்பட பல்வேறு பணிகளுக்கும் லஞ்சம் கேட்கப்படுவதாகவும் அகதிகள் கூறினர். இவற்றைத் தடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகதிகள் பெரும்பாலும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்க முகாம்கள் தோறும் மனநல மருத்துவர்கள் அனுப்பப்பட வேண்டும்.
பரிந்துரைகள்
1. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 839 ரூபாய் தேவை என்பதால் அகதிகளுக்கான பணக் கொடையை அதற்குக் குறையாமல் உயர்த்தித் தர வேண்டும். 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 500க்குக் குறையாமல் உயர்த்தித் தர வேண்டும்.
2. அரிசியை மானிய விலையில் தருவதுபோலவே நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 100 கிராம் பருப்பு 250 மி.லி. பால் ஆகியவற்றையும் மானிய விலையில் தர வேண்டும்.
3. மண்ணெண்ணெயின் அளவைக் குடும்பம் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் பத்து லிட்டராக உயர்த்தித் தர வேண்டும்.
4. சீனிக்கு உள்ள அதிகபட்ச வரம்பை (2 கிலோ) நீக்கி இப்போதுள்ளதுபோல நபருக்கு அரை கிலோ வழங்க வேண்டும்.
5. பணக்கொடை வழங்கப்படும் நாளிலிருந்து ஒரு வார காலத்துக்குள் ரேஷன் பொருட்கள் வழங்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேதியில் அவற்றைப் பெற முடியாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக மாதத்தில் மேலும் ஒரு நாளை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும்.
6. பதிவு வேண்டி விண்ணப்பித்துள்ளவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட ஒரு கால நிர்ணயம் செய்து அதற்குள் பதிவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
7. தற்போதுள்ள குடும்ப அட்டை மட்டுமல்லாது ஒவ்வொரு அகதிக்கும் புகைப்படத்துடன்கூடிய தனி அடையாள அட்டையை வழங்கிட வேண்டும்.
8. அகதி முகாம்களுக்குச் சென்று உதவிகள் செய்திட அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களை அனுமதித்திட வேண்டும்.
9. அகதி முகாம்களில் பகல் நேரத்திலும் மின்சாரம் வழங்குவதோடு மின்விசிறி, தொலைக்காட்சி முதலியவற்றைப் பயன்படுத்தவும் அனுமதித்திட வேண்டும். 'ஒரு வீட்டுக்கு ஒரு நாளைக்கு ஒரு யூனிட் மின்சாரம்தான் பயன்படுத்த வேண்டும்' என்ற கட்டுப்பாட்டை நீக்கவேண்டும். முகாம் முழுமைக்கும் ஒரு மின்சார மீட்டர் மூலம் மின் வினியோகம் செய்வதை மாற்றி ஐந்து வீடுகளுக்கு ஒரு மீட்டர் பொருத்தப்பட வேண்டும்.
10. காட்டுமன்னார்கோயில் மற்றும் அதே போன்று சுகாதாரமற்ற தானியக் கிடங்குகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
11. அகதிகள் அனைவருக்கும் நிரந்தரமான வீடுகளைக் கட்டித் தர வேண்டும். அவை ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட வேண்டும். இதற்குச் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடலாம். அகதிகள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிய பின் இந்த வீடுகளைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுத்துவிடலாம்.
12. குடிநீர் வசதியில்லாத முகாம்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13. முகாம்களில் தேவையான கழிப்பிட வசதிகளைச் செய்துதருவதோடு அங்கே பழுதடைந்து கிடக்கும் கழிப்பறைகளை உடனடியாகப் புதுப்பித்துத் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
14. தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பெண்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அகதி முகாம்களில் உள்ள பெண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
15. அகதி முகாம்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிக் கணக்கு தொடங்கவும் கடன் பெறவும் வசதி செய்து தர வேண்டும்.
16. அகதி முகாம்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குக் கைத்தொழில் பயிற்சி வழங்கி அவர்கள் சுய வேலை வாய்ப்புப் பெற உதவ வேண்டும்.
17. அகதி முகாம்களில் உள்ள அனாதரவான முதியோரை அடையாளம் கண்டு அவர்களுக்கெனத் தனியே முதியோர் இல்லங்களை அமைக்க வேண்டும்.
18. அகதிகளிடையே உள்ள ஊனமுற்றோர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோர்க்கெனத் தனியே சிறப்பு இல்லங்களை அமைத்திட வேண்டும்.
19. முகாம்களில் உள்ள படித்த இளைஞர்கள் வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்யச் சிறப்பு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
20. தச்சு வேலை முதலான கைத் தொழில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்குப் பட்டறைகள் அமைக்கக் கடனுதவி வழங்குதல் வேண்டும். தாயகம் திரும்பிய மக்களுக்கென அமைக்கப்பட்ட REPCO வங்கியின் சேவையை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
21. அகதி முகாம்களிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் 'பூமாலை'த் திட்டத்தின் மூலமாக வணிகப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.
22. அகதி முகாம்களிலுள்ள இளைஞர்கள் தயாரிக்கும் மரச் சாமான்களை TANSI மூலமாக வணிகப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
23. அகதி முகாம்களிலுள்ள இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறையைத் துரிதப்படுத்துவதோடு, அவர்களுக்கு ஆட்டோ , டாக்ஸி முதலானவற்றை வாங்குவதற்குக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட வேண்டும்.
24. அகதிகளின் பிள்ளைகளுக்கெனத் தொழிற்படிப்புகளில் குறிப்பிட்ட சில இடங்கள் முன்பிருந்த தி.மு.க. ஆட்சியின்போது ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன் விளைவாக இப்போது ஒவ்வொரு முகாமிலும் மருத்துவப் படிப்பு முடித்தவர் ஒருவரேனும் உள்ளார். இடையில் அந்தச் சலுகை ரத்துசெய்யப்பட்டது. அதனை மறுபடியும் நடை முறைப்படுத்த வேண்டும்.
25. பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளில் அகதிகளுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை எதுவும் இப்போது இல்லை. அரசுக் கல்லூரிகளில் கட்டணங்களை முற்றாக ரத்து செய்தும் சுயநிதிக் கல்லூரிகளில் கட்டணச் சலுகை வழங்க அறிவுறுத்தியும் ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.
26. அகதிகளுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்க மருத்துவர் ஒருவரை முகாம்தோறும் அனுப்ப வேண்டும். பிற மருத்துவ உதவிகளும் முகாம்களில் வழங்கப்பட வேண்டும்.
27. அகதிகளுக்கிடையே வரும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும் அவர்கள்மீது வழக்குகள் வந்தால் அவற்றைக் கையாள்வதற்கும் இலவசச் சட்ட உதவி மையங்களை முகாம்களில் அமைக்க வேண்டும்.
28. அகதிகளின் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைகளை எளிமையாக்கிட வேண்டும். இதில் தொண்டு நிறுவனங்களின் சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டியவை:
29. அகதிகள் தொடர்பாக ஐ.நா. சபை 1951 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் ஏற்படுத்திய ஒப்பந்தங்களில் இந்தியா உடனடியாகக் கையெழுத்திட வேண்டும்.
30. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. பி. என். பகவதி அவர்களால் 1996ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் வல்லுனர் குழுவின் பரிசீலனையில் உள்ள "அகதிகள் குறித்த தேசிய சட்டத்தை" உடனே நிறைவேற்ற வேண்டும்.
31. UNHCR அமைப்பு இந்தியாவில் சட்டபூர்வமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
32. இந்தியாவில் பிறந்த அகதிக் குழந்தைகள், இந்தியர்களைத் திருமணம் புரிந்துகொண்ட அகதிகள், இந்தியாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் அகதிகள் ஆகியோரிடம் அவர்களது குடியுரிமை தொடர்பாக விருப்பத் தேர்வினைக் (option) கேட்கும் விதமாக இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
33. இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக இந்தியக் கரையில் கொண்டுவந்து சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைக் கடலோரக் காவல் படை செய்வதற்குப் பணிக்கப்பட வேண்டும்.
குறிப்புகள்
"As a result of events occurring before 1 January 1951 and owing to well-founded fear of being persecuted for reasons of race, religion, nationality, membership of a particular social group or political opinion, is outside the country of his nationality and is unable or, owing to such fear, is unwilling to avail himself of the protection of that country or who, not having a nationality and being outside the country of his former habitual residence as a result of such events, is unable or, owing to such fear, is unwilling to return to it."
2. U.S. Committee for Refugees and Immigrants, World Refugee Survey 2005 - India. முழுமையான அறிக்கைக்கு பின்வரும் வலைத்தளத்தைப் பார்க்க: http://www.unhcr.org/cgi-bin/texis/vtx/home
3. Public Department POLICY NOTE - 2005-2006 Demand No 37 (http://www.tn.gov.in/policynotes/public.htm)
4. மண்டபம் முகாமின் சிறப்பு வட்டாட்சியர் திரு. முனியசாமி அவர்கள் 25.06.2006 அன்று நேரில் அளித்த தகவல்.
5. Patralekha chaterjee - Tales from Tamil Refugee Camps எனும் கட்டுரை. பார்க்க: http://www.redcross.int/EN/mag/magazine1997_3/20-21.html
6. Policy Note 2005-2006 cited above.
7. OFERR தொண்டு நிறுவனத்தின் பொருளாளர் திரு. சந்திரஹாசன் அவர்கள் 27.06.2006 அன்று தனது நேர்ப் பேச்சில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
8. குறிஞ்சிப்பாடி முகாமில் உள்ளவர்கள் 24.06.2006 அன்று இந்தத் தகவலைக் கூறினார்கள். மீண்டும் நிதியுதவி கிடைத்தால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என OFERR கூறியுள்ளதால் இடைப்பட்ட காலத்துக்குத் தாங்களே சொந்தச் செலவில் பிள்ளைகளுக்குப் போதனா மையத்தில் ஊட்டச் சத்துணவு வழங்குவதாக முகாம் தலைவர் திரு. கணேசன் தெரிவித்தார்.
9. Mohan Guruswamy, Ronald Joseph Abraham - Redefining Poverty, A New Poverty Line for a New India, Economic and Political Weekly, June 24, 2006
10. V. Suryanarayan, Between fear and hope: http://www.hinduonnet.com/fline/f12010/stories/200305_23007013100.htm
காலச்சுவடில் மூலம் உங்களுக்கு தருகிறேன்
http://www.kalachuvadu.com/issue-80/kalaaivu.htmபுகைப்படங்கள்: புதுவை இளவேனில்

0 comments:

Post a Comment

சம்பவம் © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates