Wednesday, March 25, 2009

இலங்கையில் 2 மாதத்தில் சிங்கள ராணுவத்தால் 2683 தமிழர்கள் கொலை; ஐ.நா. சபை அறிக்கை

கொழும்பு, மார்ச். 19-
இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பு தகவல்களை திரட்டி அறிக்கை தயாரித்து உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிங்கள ராணுவம் தாக்குதலால் கடந்த ஜனவரி 28-ந்தேதியில் இருந்து இந்த மாதம் 7-ந்தேதி வரை 2683 தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 7241 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதி இருந்தது. இப்போது 45 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளது.
இந்த பகுதிக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறுகிய நிலப்பரப்புக்குள் நெருக்கமான அளவில் மக்கள் வசிப்பதால் சாவு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
முன்பு தினமும் சராசரியாக 33 பேர் பலினார்கள். இப்போது 63 ஆக அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் காயம் அளவு குறைந்துள்ளது. முன்பு 184 பேர் காயம் அடைந்தனர். இப்போது 145 பேர் காயம் அடைகின்றனர்.
45 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 14 சதுர கிலோ மீட்டர் பகுதி போர் இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கேயும் அதிக அளவில் தாக்குதல் நடக்கிறது. போரில் பலியாகிறவர்களில் 3-ல் 2 பங்கினர் இங்கு நடக்கும் குண்டு வீச்சில் தான் உயிரை இழக்கிறார்கள்.
இங்குள்ள மக்களுக்கு மாதம் 3 ஆயிரம் டன் உணவு பொருள் தேவைபடுகிறது. இதற்கான உணவு பொருள் போர் நடக்கும் பகுதிக்கு வெளியே தயாராக உள்ளது. ஆனால் அவற்றை உள்ளே கொண்டுவர இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. 500 டன் உணவுகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள். இதனால் போதுமான உணவு கிடைக்கவில்லை. குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று சிங்கள ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 67 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 97 பேர் காயம் அடைந்தனர். போர் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து விமானம் மூலம் குண்டுகளை வீசி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

சம்பவம் © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates